விவேகானந்த பூங்காவானது மனதை நல்வழிப்படுத்தும் நல்ல சிந்தனைகளையும், மன மகிழ்வையும் இளைய சமுதாயத்திற்கு வழங்கி அவர்களின் வாழ்க்கை மேம்பட உதவுவதுடன், எமது மாவட்டத்தின் ஆன்மீக கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் இயற்கையுடன் கூடிய ஒரு சுற்றுலா மையமாகவும் அமையவுள்ளது.
இப் பூங்காவானது தற்போது ஜக்கிய இராச்சியத்தில் வசிக்கும் மட்டக்களப்பு திருப்பழுகாமத்தினைச் சேர்ந்த மட்/சிவானந்த வித்தியாலயத்தின் பழைய மாணவர் திரு.க.சற்குணேஸ்வரன் அவர்களின் முயற்ச்சியினால் ஸ்தாபிக்கப்பட்டு, அவர் 1996ஆம் ஆண்டு ஸ்தாபித்த சமூக நலன்புரி அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
மிகவும் அழகு நிறைந்த பூங்காவுடனும், சுவாமி விவேகானந்தரின் 30 அடி உயரமான திருவுருவச் சிலையுடனும் 3½ ஏக்கர் பரப்பான காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இப் பூங்காவானது கடந்த 2024.08.25ஆம் திகதி ராமகிருஷ்ண மிஷன் சுவாமிஜிக்களிளால் வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இப் பூங்காவில் “சுவாமி விவேகானந்தர் இல்லம்” நிர்மாணிக்கப்பட்டு அதில் சுவாமி விவேகானந்தருக்கு 30 அடி உயரமான திருவுருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இப் பூங்காவில் சகோதரி நிவேதிதா, சுவாமி விபுலானந்தர், சுவாமி நடராஜானந்தர், சுவாமி ஜீவனானந்தர் ஆகிய துறவிகளுக்கு 7அடி உயரமான சிலைகள் நிறுவப்பட்டுள்ளது.
இப் பூங்காவில் பின்வரும் 11 சுவாமிஜிக்களின் நாமங்களில் 11 இல்லங்கள் நிறுவப்பட்டுள்ளது.
01. SWAMI VIVEKANANDA HOUSE
02. SWAMI VIPULANANDA HOUSE
03. SWAMI NATARAJANANDA HOUSE
04. SWAMI JEEVANANANDA HOUSE
05. SWAMI AJARATHMANANDA HOUSE
06. SWAMI SHIVANANDA HOUSE
07. SWAMI PREMANANDA HOUSE
08. SWAMI RAMAKRISHNANANDA HOUSE
09. SWAMI BRAHMANANDA HOUSE
10. SWAMI TURIYANANDA HOUSE
11. SWAMI SUBODHANANDA HOUSE
இப் பூங்காவினை மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் அழகு நிறைந்த ஒரு இடமாக மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காக தற்போது பெருமளவிலான பூமரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றது.
சிறுவர்கள் விளையாடக் கூடிய வகையில் பல விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டு, இப் பூங்காவில் சிறுவர் விளையாட்டு பகுதி திறந்துவைக்கப்படவுள்ளது.
இப் பூங்கா மூலமாக இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சுவாமி விவேகானந்தரின் உன்னத சிந்தனைகள் பூங்காவில் பல இடங்களில் நிரந்தரமாக இருக்கக் கூடிய வகையில் காட்சிப்படுத்தப்படவுள்ளதுடன், ஓவிய வடிவிலான அவரது வாழ்க்கை வரலாறும் காட்சிப்படுத்தப்படவுள்ளது.